Published : 31 May 2021 07:54 PM
Last Updated : 31 May 2021 07:54 PM

தொழில்நுட்பக் கல்லூரித் தேர்வுகள்; தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்தில் அரியர் தேர்வுகள்: உயர் கல்வித்துறை அறிவிப்பு

அமைச்சர் பொன்முடி: கோப்புப்படம்

சென்னை

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வெழுதலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, உயர் கல்வித்துறை இன்று (மே 31) வெளியிட்ட அறிக்கை:

"உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் அறிவுரைப்படி, பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது.

மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63% ஆகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேற்படி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வெழுதலாம். இதற்கான தேர்வுக் கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்.

நடப்புப் பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணவர்களுக்கான (அரியர் தேர்வு உட்பட) தேர்வுகள் 14-06-2021 முதல் 14-07-2021 வரை நடைபெறும்.

மாணவர்கள் இதற்கான தேர்வுக் கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்".

இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x