Published : 29 May 2021 11:56 AM
Last Updated : 29 May 2021 11:56 AM

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஆனந்தக்கிருஷ்ணன் கரோனா தொற்றால் மரணம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தலைசிறந்த கல்வியாளருமான ஆனந்தக்கிருஷ்ணன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்த ஆனந்தக்கிருஷ்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டிடவியலில் இளங்கலைப் பொறியியல் படித்தார். அமெரிக்காவில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றிய ஆனந்தக்கிருஷ்ணன் ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2001 வரை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை சிறப்பாகச் செயல்பட்டவர். மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய தொழில்முறைப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் காரணமாக இருந்தவர் ஆனந்தக்கிருஷ்ணன். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தும் வகையில், ஒற்றைச் சாளர முறையையும் அறிமுகப்படுத்தியவர்.

தொழில்நுட்பத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தீராத ஆர்வம் கொண்டிருந்த ஆனந்தக்கிருஷ்ணன், இணையத்தில் தமிழை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இந்தியத் தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கியவர். புதிய பாடத்திட்டக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவருக்கு 2002-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ’இந்து தமிழ் திசை’ நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான ஆசிரியர் தேர்வில் நடுவராகப் பங்கேற்றிருந்தார். அதன்பிறகு அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் அவரை வீட்டிலேயே இருக்க வைத்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆனந்தக்கிருஷ்ணன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மக்களவை எம்.பி. கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x