Published : 27 May 2021 01:14 PM
Last Updated : 27 May 2021 01:14 PM

வானில் நிகழ்ந்த அரிதான ரத்த நிலா; பொதுமக்கள், மாணவர்கள் கண்டுகளித்தனர்

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழ்ந்தது. இந்திய நேரப்படி மதியம் சுமார் 2.17 மணி அளவில் ஆரம்பித்த இந்த முழு சந்திர கிரகணம், இரவு 7.19 வரை நீடித்தது.

இந்த முழு சந்திர கிரகணம் ஆசியாவில் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் வானம் தெளிவாக இருந்த இடங்களில் மிகத் தெளிவாகக் காட்சியளித்தது. இந்திய நேரப்படி மாலை 4.41 முதல் 4.55 வரை இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் முழு சந்திர கிரகணம் தெளிவாகத் தெரிந்தது.

இந்தியாவில் ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் பகுதி சந்திர கிரகணமாக இது தென்பட்டது. தமிழகத்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்த சந்திரகிரகணத்தை உற்றுநோக்குவதற்காகத் தொலைநோக்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உடுமலை பகுதியில் மாலை 6:40க்கு சந்திரன் உதயமானது. அப்பொழுது வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் புறநிழல் சந்திரகிரகணம் தெளிவாகத் தெரியவில்லை.

பூமி தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாகச் சந்திரனைச் சென்றடைவதைத் தடுக்கும், இது புறநிழல் என அழைக்கப்படுகிறது. மாலை 6.40 முதல் இரவு 7.19 வரை இந்த புறநிழல் சந்திரகிரகணம் நீடித்தது. அதனை தொடர்ந்து சந்திரன் ஆனது சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளித்தது. அப்போது ரத்த நிலா தெளிவாகத் தெரிந்தது.

இந்த அரிய வானியல் நிகழ்வினை வெறும் கண்களாலேயே நாம் பார்க்க முடியும் என்று மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவர்களும் பொதுமக்களும் இந்த அரிய நிகழ்வினை பைனாகுலர் கொண்டும், தொலைநோக்கி வாயிலாகவும் வெறும் கண்களாலேயேயும் கண்டுகளித்தனர். இதுபோன்ற அரிய வானியல் நிகழ்வுகள் நடக்கும்பொழுது அவற்றை உற்று நோக்கும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த சிந்தனையும் குறிப்பாக வானவியலில் ஆர்வமும் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அடுத்த சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x