Published : 26 May 2021 06:44 PM
Last Updated : 26 May 2021 06:44 PM
கரோனா தடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் தன்னார்வலராகப் பணியாற்றலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ்.சண்முகம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், டிகேஜி.நீலமேகம், எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.
இறுதியாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கருத்துரை வழங்கியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதர மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பரவல் குறைவாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பல்வேறு வகையில் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதால், இதன் முடிவுகள் கவனமாகக் கையாளப்பட்டு வருகின்றன. கரோனா பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தவரை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களைவிட ஆக்சிஜன் படுக்கை அதிக அளவில் தயாராக உள்ளது. 15 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தயார் நிலையில் உள்ளோம். ஆக்சிஜன் செறியூட்டும் கருவிகள் போதுமானதாக உள்ளன. இருப்பினும் மாநில சுகாதாரத் துறையிடம் பேசி, மாவட்டத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதிகள் பெறப்படும்.
தனியார் மருத்துவமனையில் இதர நோய்களுக்குக் காப்பீடு கிடைக்கவில்லை எனப் புகார்கள் வருகின்றன. இது தொடர்பாகத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தில் அறிவுரைகள் வழங்கப்படும்.
கரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகப் புகார்கள் வந்தன. அதில் விருப்பமுள்ள ஆசிரியர்களை, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள ஏதுவாக கூடுதல் தடுப்பூசியை மாநில சுகாதாரத் துறையிடம் கேட்டுள்ளோம். விரைவில் அவை கிடைத்துவிடும்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT