Published : 26 May 2021 02:57 PM
Last Updated : 26 May 2021 02:57 PM
நேரடியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 12ம் வகுப்பு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
முன்பு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுட நடத்திய காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 23-ம் தேதி காணொலிக் காட்சி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குறைந்த நேரத்தில் அந்தந்தப் பள்ளிகளிலேயே பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 300 பேர், ஆஃப்லைன் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாற்று மதிப்பீட்டு முறையைக் கையாள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ''முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுகாதார நெருக்கடி நிலவும் சூழலில், மாணவர்களை நேரில் அழைத்து வரச் செய்து பொதுத் தேர்வுகளை நடத்துவது பேரழிவை ஏற்படுத்தும் முடிவாக இருக்கும். மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் அல்லது மாற்று மதிப்பீடு உள்ளிட்ட பிற எந்த முறைகள் மூலமாக வேண்டுமானாலும் மதிப்பிடப்படத் தயாராக உள்ளோம்.
உச்ச நீதிமன்றம் இதுகுறித்துத் தானாகவே சு மோட்டோ வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கரோனா காலகட்டத்தின் மத்தியில் ஆஃப்லைன் மூலம் தேர்வுகளை நடத்தும் முடிவை ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT