Published : 25 May 2021 02:07 PM
Last Updated : 25 May 2021 02:07 PM
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 14-ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன், பல்கலைக்கழகச் செயல்பாடுகள் குறித்து, காணொலி மூலம் நேற்று கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
''அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ஒழுங்கு முறைப்படி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 14 முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடங்கும். 2013 ஒழுங்கு முறைப்படி இளங்கலை மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14-ம் தேதியும் இதர மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21-ம் தேதியும் தொடங்கும். கடந்த முறை தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் மாணவர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.
ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்வான / தேர்வாகாத மாணவர்கள், புதியதாக நடைபெறவிருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கி ஜூலை 15-க்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை 30க்குள் வெளியிடப்பட வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகமாக இருந்தாலும் பிற பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் ஜூலை 30-ம் தேதிக்குள் தேர்வுகள் முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்''.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT