Published : 20 May 2021 06:02 PM
Last Updated : 20 May 2021 06:02 PM
புதுச்சேரியில் தங்கிப் படிக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர், முதல்வரிடம் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவை கோரியுள்ளது.
புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. புதுச்சேரியில் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரைக்காலில் காமராஜர் கல்லூரி வளாகம், மாஹே, ஏனாமில் அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
புதுச்சேரியில் 4 இடங்களிலும், காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒரு இடத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் இளைஞர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் மையங்கள் அனைத்தும் அருகருகே உள்ளன.
இதுபற்றி இளைஞர்கள் சிலர் கூறுகையில், "புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட கோரிமேட்டுக்கோ, அருகேயுள்ள கதிர்காமத்துக்கோ வரவேண்டியுள்ளது. பாகூர், காலாப்பட்டு, வில்லியனூர், திருக்கனூர் என எல்லைப் பகுதியில் இருந்து தடுப்பூசி போட இப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. தற்போது பகல் 12 மணிக்கு மேல் ஊரடங்கு உள்ளது. கிராமத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு ஊர் திரும்புவதில் பிரச்சினை உள்ளது. அத்துடன் போதிய போக்குவரத்தும் இல்லாத சூழல் உள்ளது.
மேலும், பெண்கள் தடுப்பூசி போட வீட்டில் உள்ளவர்களுடன் வரவேண்டியது தொடங்கி பல பிரச்சினைகள் உள்ளன. அனைவரும் எளிதாகத் தடுப்பூசி போட ஏற்கெனவே வழிமுறை இங்கு உள்ளது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடுவது போல் வீட்டருகே நாங்களும் தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்தால் அதிமான இளைஞர்கள் தடுப்பூசி போட முடியும்" என்று குறிப்பிட்டனர்.
புதுச்சேரியில் தங்கிப் படிப்போருக்கும் தடுப்பூசி போடக் கோரிக்கை
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் பரிட்சய் யாதவ் கூறுகையில், "புதுச்சேரி அரசின் தடுப்பூசி வழிகாட்டுதலில் புதுச்சேரி மாநிலம் அல்லாதோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயிலும் மாணவர்கள் தொடங்கி பல கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான இளைஞர்கள் பலரும் பாதிக்கப்படுவர். வெளிமாநிலத்தில் இருந்து வந்த பலரும் தற்போதும் கல்வி சார்ந்த காரணங்களால் புதுச்சேரியில்தான் உள்ளோம்.
அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்று தடுப்பூசி போடுவது இயலாத காரியம். ஆகையால், புதுச்சேரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் இக்கருத்தை அனுப்பியுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT