Published : 20 May 2021 04:21 PM
Last Updated : 20 May 2021 04:21 PM

திமுக, இடதுசாரிகள் குறித்துப் பல்கலை. பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

திமுக, இடதுசாரி கட்சிகள் குறித்துப் பல்கலைக்கழகப் பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:

''திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் சில தவறான கருத்துகள் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பாக எம்.ஏ. சமூக அறிவியல் பாடத்தின் பாடப் புத்தகத்தில் 142-வது பக்கத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்துக்கு சில வரிகளைப் படிக்கிறேன். பாடப் புத்தகத்தில், இந்திய கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான திமுக, பொதுவுடைமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அந்தக் கட்சிகள் அந்த மக்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாகச் சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரம் உருவாக்கி, வன்முறை வெடிப்பதைக் கண்டிக்காமல் இருக்கின்றன என்று அச்சிடப்பட்டுள்ளது. இது சமூக அறிவியல் வரலாறு புத்தகத்தில் வரவேண்டிய பாடமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவை ஏதோ செய்திகளில் வந்தவையல்ல. அனைத்தும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பாடப் புத்தகத்தில் இருக்கிறது. இதுகுறித்துப் பாட ஆசிரியர், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அழைத்து விசாரித்தால் எந்த பதிலும் இல்லை. இவையெல்லாம் எதை நோக்கிச் செல்கின்றன என்பது நான் சொல்லி அனைவருக்கும் தெரிய வேண்டியது இல்லை.

நானும் சமூக அறிவியல் பாடத்தைப் படித்தவன், ஆசிரியராக இருந்தவன்தான். எந்தக் காலத்திலும் இதுபோன்ற ஒரு முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை. இந்தப் பாடங்களை எழுதியவரையும் துறை சார்ந்தவர்களையும் அழைத்து விசாரித்து வருகிறோம்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, துறை சார் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பாடம் உதாரணத்துக்குச் சொல்லப்பட்டதுதான். இன்னும் பொருளாதாரம் உள்ளிட்ட மற்ற பாடங்களில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. அனைத்து தொலைதூரக் கல்விக்கான பாடப் புத்தகங்களின் மீது ஆய்வு நடத்தி, திருத்தம் தேவைப்பட்டால் உரிய ஆசிரியர்களைக் கொண்டு வேறு பதிப்பு கொண்டுவரப்படும். இதற்கெனத் தனிக் குழு அமைக்கப்பட உள்ளது.

மற்ற பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் தொலைதூரக் கல்விப் பாடங்களும் ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அவற்றை முறையாகத் திருத்தி எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர்கள் மீது முதல்வருடன் கலந்து பேசி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x