Published : 18 May 2021 12:14 PM
Last Updated : 18 May 2021 12:14 PM
பள்ளிகளை பாரத் நெட் மூலம் இணைக்கவும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் உபகரணங்களை வழங்கவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கரோனா தீவிரம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையைப் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்துவது குறித்து மாநிலக் கல்வித்துறைச் செயலர்கள், பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மாநிலக் கல்வித்துறைச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி வழியாக நேற்று (மே 17) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநிலக் கல்வி அமைச்சர் பங்கேற்க அனுமதி வேண்டும் என்று தமிழக அரசு மே 15-ம் தேதி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்காத நிலையில், ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.
இதற்கிடையே கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாநிலங்களில் கரோனா சூழல், ஆன்லைன் கல்வியின் நிலை, பெருந்தொற்றுக் காலத்தில் வகுப்புகளில் கலந்து கொள்வதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துப் பள்ளிகளும் பாரத் நெட் மூலம் இணைக்கப்படலாம் என்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் உபகரணங்களை வழங்கவும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மன நலனைப் பாதுகாக்கும் வகையில் ’மனோதர்பன்’ இணையதளத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையான பகுதிகளில் அழுத்தம் போக்கும் அமர்வுகளை நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்தும் மாநிலங்களிடம் இருந்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் தனது சமூக வலைதளத்தில் வெளிட்டுள்ள பதிவில், ’’கல்வி என்பது தலையாய முன்னுரிமை.
இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தடையில்லாத கல்வியை உறுதிப்படுத்த கோவிட் செயல்திட்டம் தேவை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT