Published : 15 May 2021 05:35 PM
Last Updated : 15 May 2021 05:35 PM
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிபிஎஸ்இ வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த 12ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தையும் ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது. மேலும் ஜூன் 1ஆம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும், தேர்வு நடத்த ஏதுவான சூழல் இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாகத் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.
இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையாத சூழலில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் நேற்று முதலே செய்தி பரவியது. இந்நிலையில் அவற்றை சிபிஎஸ்இ மறுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கல்வி வாரியம் கூறும்போது, ''சில செய்தி ஊடகங்களில் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களையும் மே 17ஆம் தேதி காணொலிக் காட்சியில் சந்தித்துப் பேச உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT