Last Updated : 30 Apr, 2021 07:13 PM

 

Published : 30 Apr 2021 07:13 PM
Last Updated : 30 Apr 2021 07:13 PM

சினிமா பாடல்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு: திருப்பத்தூர் அரசுப் பள்ளி மாணவிகள் அசத்தல்

அரசுப் பள்ளி மாணவிகள் சிவானி, தேவிகா.

திருப்பத்தூர்

திருப்பத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் சினிமா பாடல்கள் மூலம் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த ராஜாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தேவிகா (7), சிவானி (7) ஆகியோர் தமிழ் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடலைப் பாடி, அதைக் காணொலிக் காட்சியாக வெளியிட்டுள்ளனர்.

அதில், நடிகர் தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்தில் வரும் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலை ‘கரோனா வந்தா சொல்லுங்க, நாங்க டாக்டரை வரச்சொல்லுறோம்’ என கரோனா தொடர்பான விழிப்புணர்வுப் பாடலாக மாற்றிப் பாடியுள்ளனர்.

அதேபோல, கமல் படத்தில் வரும் ஒரு பாடல், அஜித் படப் பாடல், சூர்யா படப் பாடல் எனப் பல திரைப்படங்களின் பாடல் வரிகளை மாற்றி அதை கரோனா தொற்றுடன் ஒப்பிட்டு, கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்தும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பாடியுள்ளனர்.

மேலும், கரோனாவை விரட்ட தனி மனித இடைவெளி அவசியம், கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியமான ஒன்று, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை, கரோனாவை விரட்டத் தடுப்பூசி செலுத்துவதும் முக்கியம் என்பன உள்ளிட்ட தகவல்களை அடுத்தடுத்துப் பாடல்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவிகள் இருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா பாடல்கள் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், இரு மாணவிகளுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

3-ம் வகுப்பு மாணவிகளை கரோனா விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடச்செய்த ராஜாவூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராவுக்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x