Published : 28 Apr 2021 05:19 PM
Last Updated : 28 Apr 2021 05:19 PM

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து கற்பிக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா சூழ்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. எனினும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும்.

மேலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் (இணைப்புப் பாடம்) மற்றும் பயிற்சிப் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்கவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள அலைபேசி, வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாணவர்கள் பயிற்சிக்கான விடைத்தாள்களைச் சரிபார்த்துத் தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வழங்க, அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த கல்வி ஆண்டுக்குப் பள்ளிகளைத் தயார் செய்யும் பொருட்டும், அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்கான பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கவும், மே மாதக் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும்''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x