Published : 21 Apr 2021 01:03 PM
Last Updated : 21 Apr 2021 01:03 PM
பள்ளி மாணவர்களுக்கு கரோனா காலத்தில் ஏற்படும் கற்றல் குறைபாட்டைச் சரிசெய்ய 'பிரிட்ஜ் கோர்ஸ்' கையேட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. 1 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி, தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர். எனினும், ஒரு வகுப்பை முழுமையாகப் படிக்காமல் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்த வகுப்புகளில் கணிதம் உட்பட முக்கியப் பாடங்களில் பின்தங்க நேரிடும்.
அதேபோல, நேரடிக் கற்பித்தல் தடைப்பட்டுள்ளதால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடு ஏற்படக்கூடும். இதைச் சரிசெய்யவே, இடைக்கால சிறப்புக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில், பிரத்யேக ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லூரிகளில் நடத்தப்படும் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ போல மாணவர்கள் நேரடி முறையில் படிக்காத, முக்கியப் பாடங்கள் கொண்ட அடிப்படைக் கல்வியை அறியும் வகையில், வகுப்பு வாரியாக சிறப்புக் கையேடுகள் அச்சிடப்பட்டு, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வழியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ கையேடு சார்ந்த பாடப்பகுதிகள் நாளை (ஏப்.22) முதல் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன. அதற்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT