Published : 15 Apr 2021 03:55 PM
Last Updated : 15 Apr 2021 03:55 PM
கரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 2-வது முறையாகத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் முதல் முறையாக கரோனா தொற்றால் இந்தியா முழுவதும் புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில், கரோனாவுக்கு 1,038 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்து பரவி வருகிறது.
இதற்கிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தன.
உத்தரப் பிரதேசம், கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்று விரைவில் முடிவு எடுப்போம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறும்போது, ''மே மாதத்தில் மாநிலத்தின் கரோனா தொற்று சூழல் ஆராயப்பட்டு, 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். சூழல் சரியாக இருந்தால் மே முதல் வாரத்தில் புதிய கால அட்டவணை அறிவிக்கப்பட்டு மே 20-ம் தேதிக்குப் பிறகு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
மே 15-ம் தேதி வரை 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பறைக் கற்றலும் நடத்தக் கூடாது. இந்தக் காலத்தில் தேர்வுகளும் நடைபெறாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் ஏப்ரல் 24-ம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்கப்படுவதாக இருந்தன. இவை கரோனா பரவல் காரணமாக மே 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இரண்டாவது முறையாகத் தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT