Published : 15 Apr 2021 01:03 PM
Last Updated : 15 Apr 2021 01:03 PM

ஆந்திராவில் திட்டமிட்டபடி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள்: கல்வித்துறை அமைச்சர் உறுதி

கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்.

ஆந்திர மாநிலத்தில் திட்டமிட்ட தேதியில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது.

அதேபோல மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பொதுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன.

மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்று விரைவில் முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு (இண்டர்) பொதுத் தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''திட்டமிட்ட கால அட்டவணையில், 10-ம் வகுப்பு மற்றும் இண்டர் தேர்வுகள் ஆந்திராவில் தொடங்கும். அனைத்துப் பள்ளிகளிலும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதனால் பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்காமல், அதே தேதிகளில் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்'' என்று அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 7 முதல் ஜூன் 16 வரை நடைபெற உள்ளன. இண்டர் தேர்வுகள் மே 6-ம் தேதி தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x