Published : 08 Apr 2021 04:33 PM
Last Updated : 08 Apr 2021 04:33 PM
பிளஸ் 2 பொதுத் தேர்வைத் திட்டமிட்டபடி நடத்துவதா என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையிலான குழு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாகக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஏற்கெனவே பிளஸ் 2 தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார், ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் அப்போது தேர்வு விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தலைமைச் செயலாளர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து கரோனா பரவலைத் தடுக்க புதிய வகைக் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து முந்தைய பள்ளிக் கல்வித்துறை கூட்டத்தின் தொடர்ச்சியாக, அரசின் தலைமைச் செயலாளருடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக 38 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், பிளஸ் 2 பொதுத் தேர்வைத் திட்டமிட்டபடி நடத்துவதா, ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மாணவர்களின் உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம் என்பதால் பொதுத் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT