Published : 05 Apr 2021 03:26 PM
Last Updated : 05 Apr 2021 03:26 PM
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் (PILC) பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆளுநர் தமிழிசை உறுதி அளித்துள்ளார். இங்கு வெளியிடப்படும் நூல்களை மின்னணு நூல்களாக மாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். இங்கு விற்பனைக்கு இருந்த நூல்களையும் விலைக்கு வாங்கினார்.
புகழ்பெற்ற புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர்களே நியமிக்கப்படாத சூழலில், இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ள மூன்றே பேராசிரியர்களுடன் இயங்கி வருகிறது. பேராசிரியர் பணி நியமனத்தில் தொடர் தாமதத்தால் கடும் சிக்கலில் ஆராய்ச்சி மாணவர்கள் தவிப்பதாக இந்து தமிழில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிறுவனம் தொடர்பாக கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன், நிறுவனத்தின் இயக்குநர் சம்பத் ஆகியோர் ஆளுநரிடம் விளக்கினர். அப்போது அவர்கள் "புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (PILC) கடந்த 1986-ம் ஆண்டு முதல் இயங்குகிறது. மானுடவியல், இலக்கியம், பண்பாடு, கவிதைகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்துதலில் முக்கியத்துவம் பெற்றது இந்நிறுவனம்.
தமிழ் தொடர்பான முக்கிய ஆவணங்களை உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் வகையில் பல நூல்களை வெளியிட்டுள்ளது. 26 அறக்கட்டளை இருக்கைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு சொற்பொழிவுகளும் நூல்களாக்கப்பட்டுள்ளன.
ஆய்வுக்கட்டுரை நூல்களும் ஏராளமாக வெளிவருகின்றன. அத்துடன் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளையும் நடத்துகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து வரும் ஆளுநர் தொடங்கி அதிகாரிகள் வரையில் உள்ளோருக்கும், வெளிநாட்டவருக்கும் தமிழ் கற்றுத் தரும் பணியிலும் ஈடுபடுகின்றனர்" என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து ஆளுநர் தமிழிசை அங்கிருந்த நூலகத்தையும், பதிப்பிக்கப்பட்ட நூல்களையும் வெளியீடுகளையும், முக்கிய நூல்களையும் பார்த்தார். இந்நிறுவன நூலகத்தை மேலும் சிறப்படையச் செய்வதற்கு முயற்சிகள் எடுப்பதாகக் கூறினார்.
இந்நிறுவனத்தில் முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். அவர்கள் ஆய்வு செய்த நூல்களையும் பார்த்தார். தமிழ்மொழிக் கற்பித்தல் நுட்பங்கள் மேம்பாடு அடைவதற்குக் கூடுதல் வழிவகை செய்யுமாறும் ஆளுநர் தமிழிசை கூறினார்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம், "காலியிடங்களான 6 பேராசிரியர்களை நிரப்புவதற்கான முயற்சிகளை எடுக்கிறேன். இந்நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அத்தனை நூல்களையும் மின்னணு நூல்களாக மாற்றுங்கள், இந்நிறுவன வளர்ச்சிக்கான வசதிகளையும் செய்து தருகிறேன். நிறுவனத்தின் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு புதுச்சேரியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்பினைச் சார்ந்த பல்வேறு அறிஞர்கள் வந்திருந்தனர். அவர்களும் பலவிதக் கோரிக்கைகளை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து ஆளுநர், "தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நலிவடைந்த தமிழ் கலைஞர்களுக்கு உதவி புரியவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்களைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களின்போது ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்" என்று கலைப்பண்பாட்டுத்துறை செயலரை அறிவுறுத்தினார்.
இறுதியில் மொழியியல் நிறுவனத்தில் புத்தகங்களையும், இதழ்களையும் ஆளுநர் தமிழிசை விலைக்கு வாங்கிச் சென்றார்.
முன்னதாக வெளியான இந்து தமிழ் செய்தி:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT