Published : 01 Apr 2021 04:56 PM
Last Updated : 01 Apr 2021 04:56 PM
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) தொடங்கியுள்ளது. இதில் சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம்.
தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்தப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும்.
இந்நிலையில் ஒன்றாம் வகுப்புக்கான விண்ணப்பப் பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. பெற்றோர்கள் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம். இதற்குக் குழந்தைகளின் வயது மார்ச் 31, 2021-ன்படி, 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 7 வயது வரை இருக்கலாம்.
இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.
2021-22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் கட்ட சேர்க்கைப் பட்டியல் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைப் பட்டியல் முறையே ஏப்ரல் 30 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT