Last Updated : 29 Mar, 2021 01:04 PM

 

Published : 29 Mar 2021 01:04 PM
Last Updated : 29 Mar 2021 01:04 PM

நடமாடும் பள்ளி, நூலகம்: ஏழைக் குழந்தைகளுக்காக ஸ்கூட்டி மூலம் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

சாகர்

கரோனா காலத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக ஸ்கூட்டியில் நடமாடும் பள்ளி மற்றும் நூலகத்தை உருவாக்கி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

கரோனா பெருந்தொற்றால் பள்ளி, கல்லூரிகள் சுமார் ஓராண்டு காலம் மூடப்பட்டிருந்த நிலையில், தொற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் திறக்கப்பட்டு, செயல்படத் தொடங்கின. தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில், பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட் உபகரணங்களுக்கு வாய்ப்பில்லாத கிராமப்புற, ஏழை மாணவர்களுக்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சந்திரா ஸ்ரீவத்சவா, ஸ்கூட்டியில் நடமாடும் பள்ளி மற்றும் நூலகத்தை உருவாக்கியுள்ளார். சிறிய வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த வண்டியில், பாடப்புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறத்தில் பாடம் கற்பிக்கக் கரும்பலகை பொருத்தப்பட்டுள்ளது.

வண்டியை சாகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் ஓட்டிச் சென்று, அங்குள்ள மரத்தடியில் மாணவர்களை ஒன்றுதிரட்டி சிறிய மைக் மூலம் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறார் ஆசிரியர் சந்திரா ஸ்ரீவத்சவா.

சில புத்தகங்களை இலவசமாகவும் வேறு சில புத்தகங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் திருப்பிக் கொடுக்குமாறும் மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்குகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வி எந்தச் சூழ்நிலையிலும் தடைபடக் கூடாது என்ற நோக்கில் இதைச் செய்து வருவதாக, ஆசிரியர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியரின் இந்தத் தன்னலமற்ற சேவைக்கு, சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x