Published : 25 Mar 2021 11:44 AM
Last Updated : 25 Mar 2021 11:44 AM
ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழக மாணவர் உள்ளிட்ட 13 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்திலும் தேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் 334 நகரங்களில் 792 தேர்வு மையங்களில் மார்ச் மாதம் 16 முதல் 18-ம் தேதி வரை ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதில், முதல்முறையாக கார்கில் பகுதியிலும் கோலாலம்பூர், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிந்த 6 நாட்களுக்குள் முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில், தமிழக மாணவர் அஸ்வின் ஆபிரஹாம் உள்ளிட்ட 13 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த சித்தார்த் கல்ரா மற்றும் காவ்யா சோப்ரா; தெலங்கானாவைச் சேர்ந்த பன்னூரு ரோஹித் குமார் ரெட்டி, மதுர் ஆதர்ஷ் ரெட்டி, ஜோஸ்யுலா வெங்கட்ட ஆதித்யா; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிராடின் மொண்டல்; பிஹாரைச் சேர்ந்த குமார் சத்யதர்ஷி, ராஜஸ்தானைச் சேர்ந்த மிருதுல் அகர்வால் மற்றும் ஜெனித் மல்ஹோத்ரா; தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் ஆபிரஹாம்; மகாராஷ்டிராவைச் சேர்ந்த பக்ஷி கார்கி மகரந்த் மற்றும் அதர்வா அபிஜித் தம்பத் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.
தேர்வு முடிவுகளைக் காண: jeemain.nta.nic.in.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT