Published : 15 Mar 2021 05:57 PM
Last Updated : 15 Mar 2021 05:57 PM
சித்தா, நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வைக் கட்டாயப்படுத்துவதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
’’கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பொது நலனுக்கான செயற்பாட்டாளர்கள், அரசியல் இயக்கத்தினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழ்நாட்டில் அகில இந்தியப் பொது மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்துக்கு நீட்தேர்வு முறையில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி, போராடியும் வருகிறோம்.
இத்தகைய எதிர்ப்புகளை, கோரிக்கைகளைப் பற்றிப் பொருட்படுத்தாது, மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வானது சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பு உருவாகும் எனும் நம்பிக்கை எங்களிடம் இருந்தது. இந்த சூழலில், சித்தா, நர்சிங் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் எனும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டிக்கிறோம்.
தமிழக மாணவ, மாணவிகளின் குடும்பங்களில் பல லட்சக்கணக்கான ரூபாய்களைக் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடித்தும், மாணவ, மாணவிகளின் சில கல்வி ஆண்டுகளை நாசமாக்கியும், பலரின் உயிர்களைக் காவு வாங்கியும், நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் அதிபர்களை பெரும் கோடீஸ்வரர்களாக்கி வருவதையும் தவிர, நீட் நுழைவுத் தேர்வு சாதித்தது என்ன? எனும் ஆதங்கமும், வினாவும் பெற்றோர்களின் மனதில் ஓயாத அலையாக அடித்துக்கொண்டே இருக்கிறது.
மத்திய அரசால் எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்பில் திணிக்கப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வில் இருந்து முழு விலக்கு வேண்டும் என்று தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்துப் போராடி வருவதைப் பொருட்படுத்தாது மத்திய அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, நர்சிங் மருத்துவப் படிப்புகளில் சேரவும், பயிலவும் நீட் தேர்வு விருப்பப் பூர்வமானது எனும் பெயரில் கட்டாயம் ஆக்குவதும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போன்றதாகும்.
எனவே தமிழ்நாட்டின் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்களின் குழந்தைகளுடைய மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கின்ற நீட் நுழைவுத் தேர்வு திணிப்பை மத்திய அரசு முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வுத் திணிப்பினை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT