Published : 02 Mar 2021 04:11 PM
Last Updated : 02 Mar 2021 04:11 PM
தமிழகத்தைப் பின்பற்றியே பள்ளித் தேர்வுகள் குறித்துத் துணைநிலை ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தேர்தலுக்கு பின்னால் தேர்வு நடத்த ஆலோசனை செய்து வருவதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திருநள்ளாறில் இன்று (மார்ச் 2) செய்தியாளர்களிடம் கூறியது:
”தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பாடத் திட்டத்திலும், பொதுத் தேர்வுகளிலும் ஒரு அங்கமாக புதுச்சேரி கல்வித்துறை கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
கரோனா பரவல் சூழல், பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அந்த அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.
தமிழகக் கல்வித்துறையின், ஒரு மாவட்டமாகவே புதுச்சேரி கருதப்படுகிறது. தமிழகத்தில் தேர்ச்சி அறிவிப்பு வெளியான நிலையில், புதுச்சேரி மாணவர்களின் நிலை குறித்த அறிவிப்பைப் புதுச்சேரி கல்வித்துறை வெளியிடவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு தேர்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
இது புதுச்சேரி மாணவர்கள், பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித் துறையோடு இணைந்த புதுச்சேரி கல்வித்துறை, தனியாக ஒரு முடிவை எடுக்க முடியாது. சட்ட ரீதியாக இதனை நடைமுறைப்படுத்துவது கடினமானது.
துணைநிலை ஆளுநர் இந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
உயர் கல்வியில் சேரும்போதும், போட்டித் தேர்வுகளின் போதும் பள்ளி பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். அப்போது இது குழப்பான நிலையை உருவாக்கும். மேலும் புதுச்சேரி கல்வித்துறையில் தனியாகக் கேள்வித் தாள்களை உருவாக்கும் அமைப்போ, அதிகாரமோ இல்லை. எனவே புதுச்சேரி உயரதிகாரிகள், துணைநிலை ஆளுரிடம் இதுகுறித்து விளக்கமாகப் பேசி, தமிழக அரசின் முடிவே பின்பற்றப்படும் என்கிற அறிவிப்பைச் செய்து, குழப்பத்துக்குத் தீர்வு காணவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல், ரூ.1 கட்டணப் பேருந்து இயக்கம் தொடர்பாக, எங்கள் அரசு உரிய முடிவுகளை, உரிய காலத்தில் எடுத்து தலைமைச் செயலர், அரசு செயலருக்குக் கோப்புகளை அனுப்பியது. ஆனால் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு கோப்புகளைத் திருப்பி அனுப்பி, அனுமதி வழங்காமல் தாமதம் செய்துவந்தனர். ஆனால் இப்போது அதே கோப்புகளுக்குக் கையெழுத்திட்டு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
தேர்தலை கருத்தில்கொண்டு தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் இவ்வளவு வேகமாகச் செய்யும் செயலால் மக்கள் பயனடைகிறார்கள் என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருக்கிறது, அதேவேளையில் மக்களும் இச்செயல்களை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.”
இவ்வாறு முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT