Last Updated : 01 Mar, 2021 08:28 PM

 

Published : 01 Mar 2021 08:28 PM
Last Updated : 01 Mar 2021 08:28 PM

புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் உண்டு- ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும். எல்லோரும் எழுதித் தேர்ச்சி பெறுவார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதிய உணவு குழந்தைகளுக்கு இன்று முதல் தரப்பட்டுள்ளது. நாளை முதல் காலையில் குழந்தைகளுக்கு பால் தரப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று மாலை சட்டப்பேரவைக்கு வந்தார். சட்டப்பேரவைப் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி, முதல்வர் அலுவலகத்தைத் தாண்டி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் அறைக்குச் சென்ரார். கேபினெட் அறையில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார், மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் சந்திரமவுலி உள்ளிட்டோருடன் ஆலோசித்தார். இந்தக் கூட்டம் சுமார் ஒருமணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டு, 2,400 குழந்தைகள் மதிய உணவு எடுத்துள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்குக் காலையில் பால் தருவது நிறுத்தப்பட்டிருந்தது. நாளை காலை முதல் அதுவும் தரப்படும். குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான அனைத்தும் தரப்படும்.

தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்காலில் 9, 10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இல்லை என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் தேர்தலுக்குப் பின்னால் தேர்வு வைக்கலாமா என ஆலோசனை செய்து வருகிறோம். தேர்வுத் தேதியை மாற்றி அமைக்க உள்ளோம். அதைத் தற்போது அறிவிக்க முடியாது. தேர்தல் தேதியை மனதில் வைத்து தேர்வு தேதியை மாற்றி வைக்க ஆலோசிக்கிறோம். தமிழகம் இவ்விஷயத்தில் கொள்கை முடிவு எடுத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள குழந்தைகளுக்குத் தேர்வு நடத்தலாம். ஏனெனில் கடந்த அக்டோபர் முதல் அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். கரோனா, தேர்தல் தேதிகளால்தான் தேர்வைப் பிறகு நடத்துவது பற்றிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். அதனால் புதுச்சேரியில் தேர்வில் முதலில் இருந்த பழைய முறையே தொடரும். இதில் குழப்பம் இல்லை.

குழந்தைகள் படிக்க வேண்டும். தேர்வு தேதியை குழந்தைகளுக்கு வசதியாக மாற்றுவோம். இதில் பெற்றோர், குழந்தைகள் ஏதும் கோரிக்கை வைப்பார்களா என்று பார்ப்போம்."

இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x