குழந்தைகளின் பாதுகாப்புக்காக கேரள அரசுப் பள்ளிகளில் சானிடைசர் பூத்கள் அமைப்பு
கரோனா தொற்றுக்கு நடுவில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக கேரள மாநிலப் பள்ளிகளில் சானிடைசர் பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள பள்ளிகளில் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 300 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் முன்புறத்திலும் அமைக்கப்பட்டுள்ள பூத்தில் சென்சார் பொருத்தப்பட்ட தானியங்கி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களும், பிறரும் கைகளால் தொடாமலேயே சானிடைசரைப் பெற்று, கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளமுடியும்.
ஒவ்வொரு இயந்திரத்திலும் மின்சாரம் மற்றும் பேட்டரி உள்ளிட்ட வசதிகளைச் செய்ய குறைந்தது ரூ.1,500 செலவாகிறது. மாநிலப் பொதுக் கல்வித் துறையின் (ஜிஇடி) கீழ் தேசிய சேவைத் திட்டத்தின் ஒரு பிரிவான உயர்நிலைத் தொழிற்கல்வி சார்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
மின்னியல் பிரிவைப் பாடமாகக் கொண்ட உயர்நிலைத் தொழிற்கல்வி மாணவர்கள் இந்த இயந்திரத் தயாரிப்பில் ஈடுபட்டனர். சுமார் 42 சதவீத இயந்திரங்கள் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
