Published : 01 Mar 2021 01:32 PM
Last Updated : 01 Mar 2021 01:32 PM
கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
யுனெஸ்கோவின் உலகளாவிய கல்விக் கண்காணிப்பு ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
''கரோனா பெருதொற்றுக் காலத்துக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு மீதான குறுகிய கால விளைவுகளை அறிந்துகொள்ள உலகம் முழுவதும் அனைத்துப் பிராந்தியங்களில் இருந்தும் 29 நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் உலக வங்கிக் குழுவினர் உதவியுடன் சரிபார்க்கப்பட்டன.
ஆய்வுக்கு மூன்று குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் (ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, உகாண்டா), 14 குறைந்த நடுத்தர வருமான நாடுகள் (பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, கென்யா, கிர்கிஸ்தான், மொராக்கோ, மியான்மர், நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான்), 10 உயர் நடுத்தர வருமான நாடுகள் (அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, ஜோர்டான், இந்தோனேசியா, கஜகஸ்தான், மெக்ஸிகோ, பெரு, ரஷ்யா, துருக்கி) மற்றும் இரண்டு உயர் வருமான நாடுகள் (சிலி, பனாமா) எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் குறைவான வருமானம் (low-income countries) மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் (lower-middle income countries) கொண்ட நாடுகளில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, இந்தியா, மியான்மர், நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளில் கல்வித் துறைக்கு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் வளர்ச்சித் திட்டங்களை அடையும் முனைப்பு தன்னியல்பாகக் குறைந்துள்ளது.
இந்தக் காலத்தில் பள்ளிகளில் தொற்றைக் குறைக்க உரிய, தேவையான நடவடிக்கைளை எடுக்கும் பொருட்டு கூடுதல் நிதி செலவிடப்பட வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்ட சிறப்புத் திட்டங்களை வகுத்து அதற்கும் நிதியுதவி அளிக்க வேண்டும்.
பள்ளிகளைப் பாதுகாப்புடன் திறக்கக் கூடுதல் நிதி அவசரமாகத் தேவைப்படும் சூழலில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் கல்விக்கான நிதியைக் குறைத்துள்ளன. இது கவலையை ஏற்படுத்துகிறது''.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 11.43 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25.37 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT