Last Updated : 26 Feb, 2021 06:03 PM

 

Published : 26 Feb 2021 06:03 PM
Last Updated : 26 Feb 2021 06:03 PM

புதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி கடற்கரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் சிமெண்ட் இருக்கைகளைத் திறந்துவைத்து அங்கிருந்த குழந்தைகளுக்கு சோப்புகுமிழி ஊதி விளையாடும் பபுள்ஸ் பாட்டில்களை விலைகொடுத்து வாங்கித் தருகிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை | படம்: செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

புதுச்சேரி மக்களுக்குத் தேவையான அளவு வேலைவாய்ப்பு தருவதற்கான பணிகள் நடந்து வருவதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடற்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிமெண்ட் இருக்கைகளைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடமாடும் கழிப்பறை வண்டிகளின் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

"ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது பற்றி விவாதித்தோம். ரேஷன் கடைகளை நியாயவிலைக் கடைகளாக மாற்றித் தொடங்க, திட்டமிட்டு வருகிறோம். இத்திட்டம் 50 சதவீதம் பூர்த்தியில் உள்ளது. அங்கு நியாயமான விலையில் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வரும் திட்டமுள்ளது.

தற்போது நேரடிப் பணப் பரிமாற்ற முறை நடைமுறை கொள்கை முடிவாக உள்ளது. அதை உடனே மாற்ற முடியாவிட்டாலும், பல துறைகளிடம் ஆலோசித்து வருகிறேன். மக்களுக்காகதான் இத்திட்டங்கள். அதற்கு பதிலாக அரிசி தேவையென அவர்கள் விருப்பப்பட்டால் அதற்கான நடவடிக்கையும் எடுப்போம். மத்திய அரசிடம் கோரிக்கையும் வைப்போம்.

தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் முடங்கியிருந்த திட்டங்கள் தொடர நடவடிக்கை எடுக்கிறோம். அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு தருவது தொடர்பான கோப்புக்குக் கையெழுத்திட்டு விட்டேன். காலை உணவு, இலவசப் பேருந்து வசதி ஆகியவற்றையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் 9 , 10, 11-ம் வகுப்புகளைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாமா என்பது பற்றிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும். யூனியன் பிரதேசத்துக்கு அதிகாரிகளைப் பணி அமர்த்த ஒரு விதிமுறை உள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணியாற்றலாம். தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க நானும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன்.

புதுச்சேரியில் அதிகளவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் சூழலில் பத்தாயிரம் மேற்பட்டோருக்கு ஊதியம் இல்லாத சூழல் உள்ளதே என்று கேட்கிறீர்கள். ஆனால் மத்திய அரசுதான் நியமனங்களைச் செய்கிறது. நாம் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும். அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்கள் இருப்பதை அறிந்தேன். வருங்காலத்தில் தேவையான அளவு வேலைவாய்ப்பைத் தர மிகப்பெரிய திட்டம் வரும். அதற்கான பணிகள் நடக்கின்றன.

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்குச் சத்துணவு தேவை. கேழ்வரகு, அரிசி மட்டும் போதாது என்பதால் வாரம் மூன்று முட்டைகள் தர உத்தரவிட்டுள்ளேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால் குழந்தைகள் மருத்துவமனை செல்வது குறையும். இது ஆக்கப்பூர்வ முதலீடு. அதேபோலக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சத்துணவுத் தொகுப்பு தர திட்டம் தயாரித்து வருகிறோம்."

இவ்வாறு ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x