Published : 25 Feb 2021 01:14 PM
Last Updated : 25 Feb 2021 01:14 PM
தமிழகம், புதுச்சேரியில் நீட் முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், உடனடியாகத் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்குத் தேர்வர்கள் மார்ச் 15-ம் தேதி நள்ளிரவு 11.55 மணிவரை https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஹால் டிக்கெட் ஏப்.12-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவுகள் மே 31-ல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், உடனடியாகத் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கும், தேசியத் தேர்வுகள் வாரியத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "இரண்டு நாட்களாகத் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய நீட் முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வர்கள் என்னைத் தொடர்புகொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வு மையங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகத் தமிழ்நாட்டு மையங்கள் நிரம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஆகவே, தேர்வர்கள் தமிழ்நாட்டு மையத்தைத் தெரிவு செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு புதுச்சேரி, கேரளா மையங்களும் நிரம்பிவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அந்த வாசல்களும் அடைபட்டுவிட்டன.
இது தேர்வர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அவர்கள் மனதில் பதற்றத்தையும், பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. கோவிட் காலம் என்பதால் வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்வதும், அங்கு போய்த் தங்குவதும் மிகக் கடினமாக இருக்கும். பெண் தேர்வர்கள், அவர்களோடு துணையாகச் செல்லும் மூத்தவர்கள் ஆகியோர் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள்.
ஆகவே, தேர்வர்களின் நியாயமான உணர்வுகளைக் கணக்கில் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன்" என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT