Published : 24 Feb 2021 07:58 PM
Last Updated : 24 Feb 2021 07:58 PM
பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு நிகழ்வு நடக்கும் ஜிப்மரில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ஆய்வு செய்தார். பிரதமர் வருகையால் போக்குவரத்தும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்குப் புதுவை வருகிறார். அங்கு அவருக்கு பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்குக் கூடத்துக்குப் பிரதமர் செல்கிறார்.
இதையொட்டி பிரதமர் நிகழ்வு நடக்கும் ஜிப்மர் கருத்தரங்குக் கூடத்துக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் இன்று சென்று ஆய்வு செய்தார். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா என்று பார்வையிட்டார். ஜிப்மர் மருத்துவனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன், சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கோத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் பங்கேற்க உள்ள பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நாளை ஜிப்மர் வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. சாலைப் பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டுப் பணி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகளப் பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
விழாவுக்குப் பின் காரில் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் மதியம் 12 மணிக்குப் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். பின்னர் பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்படுகிறார். பிரதமர் வருகையையொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, காமராஜர் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதி விரைவுப் படையினர் புதுவைக்கு வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா மேடை, பொதுக்கூட்ட மேடை போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுக் கூட்டத்தில் பிரதமருடன் மேடையில் அமர உள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் உட்பட பாஜக நிர்வாகிகளுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
போக்குவரத்து மாற்றம்: பள்ளிகள் விடுமுறை
புதுச்சேரி நகர் முழுவதும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையொட்டி இன்று மாதிரி சோதனை ஓட்டத்தினை போலீஸார் நடத்தினர். சரியான ஏற்பாடுகளுடன் சோதனை மேற்கொள்ளப்படாததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடு நேரம் சாலைகளில் மக்கள் தவிக்கும் சூழலை போலீஸார் உருவாக்கியதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் பிரதமர் வருகையை அடுத்து, போக்குவரத்து மாற்றம் அறிவிப்பால் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் வந்து செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT