Published : 23 Feb 2021 07:10 PM
Last Updated : 23 Feb 2021 07:10 PM
காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரித்த பிரதமர் மோடி, இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வகையில் கட்டமைப்புகளை ஐஐடி மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பழமையான ஐஐடிக்களில் ஒன்றாக ஐஐடி காரக்பூரின் 66-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. காணொலிக் காட்சி முறையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நீங்கள் (மாணவர்கள்) 3 எஸ்களை (Self-3) மந்திரமாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் தன்னலமற்ற தன்மை (self-awareness, self- confidence and selflessness) ஆகியவை மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
சூரிய மின்சக்தி போன்ற பாதுகாப்பான, மலிவான, சூழலுக்கு உகந்த ஆற்றல் சக்தியின் தேவையை உணர்ந்து அதை மக்களிடையே பரவலாக்க வேண்டும். சூரிய மின்சக்திக்கான ஒரு யூனிட் செலவு இந்தியாவில் மிகக் குறைவுதான். இருப்பினும், அதை வீடுகளுக்குக் கொண்டு செல்வது இன்னும் பெரிய சவாலாகவே உள்ளது.
உத்தரகாண்டில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் உங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். இயற்கைப் பேரிடர்களைத் தாங்கக்கூடிய, பேரழிவுகளைத் தடுக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இயற்கைப் பேரிடர்கள் பெரும்பாலான கட்டமைப்பையே அழித்து விடுவதால் காலநிலை மாற்றம் பெரிய சவாலாக உள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மையில் இந்தியா உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
ஐஐடிக்கள் வெறும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களாக இல்லாமல், சுதேச தொழில்நுட்ப நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதேபோல நீங்கள் (மாணவர்கள்) பிரதமர் ஆராய்ச்சி நிதியுதவித் திட்டத்தையும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT