

புதுச்சேரியில் பொறியியல், பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பொறியியல், பி.பார்ம், நர்சிங், பி.எஸ்சி. விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் இதுவரை நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு பிப்.22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி புதுச்சேரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, காரைக்காலில் காமராஜர் பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுயநிதி இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று (பிப்.22) காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு எஸ்சி பிரிவு மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதியைச் சேர்ந்த இபிசி, பிசிஎம், எஸ்டி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
மதியம் 3.30 மணிக்கு 99.333 முதல் 69.333 வரை கட்-ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்து பிரிவு மாணவர்களுக்கான பி.டெக். கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து இன்று (பிப்.23) 9 மணி முதல் மதியம் வரை 69.167 முதல் 41.667 வரை கட்-ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான பி.டெக். கலந்தாய்வு நடக்கிறது. இதைத் தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு உயிரியல் பாடப்பிரிவில் உள்ள டிப்ளமோ இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மதியம் 3 மணிக்கு பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பி.பார்ம், பிஎஸ்பி நர்சிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் அரசு பொறியியல் கல்லூரியிலும், காரைக்காலில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியிலும், மாஹேவில் மகாத்மா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், ஏனாமில் எஸ்ஆர்கே பொறியில் கல்லூரியிலும் இந்த சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இக்கலந்தாய்வில் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு, இடங்களை தேர்வு செய்தனர்.
இதனிடையே கடந்த 21-ம் தேதி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற இருந்த கலை அறிவியல் பாடப்பிரிவுக்கான சிறப்புக் கலந்தாய்வு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இக்கலந்தாய்வு நாளை (பிப்.24) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.