

நாங்கள் ஆசிரியர்களாக படைக்கப்பட்டோம் என வானரமுட்டி ஆசிரியர் பயிற்சியில் படித்த முன்னாள் மாணவர்கள் பெருமிதம் கொண்டனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவ தனி வங்கிக் கணக்கு தொடங்கவும் அவர்கள் உறுதி பூண்டனர்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 1997 - 1999ஆம் ஆண்டு வரை படித்த மாணவ, மாணவிகள் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று சந்தித்துக்கொண்டனர். ஆசிரியர் கல்விப் பயிற்சி முதல்வர் பி.கோல்டா கிரேனா ராஜாத்தி தலைமை வகித்தார். விழாவில், கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்த மற்றும் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர், தாங்கள் பயின்றபோது இருந்த வகுப்பறைகளுக்குச் சென்று தங்களது பள்ளிக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, பயிற்சி பள்ளிக்குப் பின்னர் அவர்கள் கடந்து வந்த பாதைகள் குறித்தும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில்,ஆண்டுதோறும் சந்திக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்ய வேண்டும். இதற்கென ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் தங்களால் இயன்ற தொகையை அதில் செலுத்தி, அதன் மூலம் உதவிகளை செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் இளமனூரில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் மு.மகேந்திரபாபு கூறுகையில், ''மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வரலாற்றில் நான் இங்கு பயின்றபோது 'இந்தியனே எழுந்து நில்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிட்டேன்.
அப்போது நாங்கள் வளர்பிறை கையெழுத்து மாதப் பத்திரிகையையும் தொடங்னோம். 'இலக்கியம் எங்கள் விழி, அதுவே வாழ்க்கையின் வழி' என்ற ஸ்லோகத்துடன் வெளியிட்டோம். இதற்கு விரிவுரையாளர் கண்ணையா வழிகாட்டியாக செயல்பட்டார். நாங்கள் கல்லூரியை விட்டு வெளியே சென்ற பின்னரும் பல ஆண்டுகள் தொடர்ந்து பத்திரிகை நடத்தப்பட்டது.
தற்போது நான் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களை இணைத்து அதனை நடத்துகிறேன். 22 ஆண்டுகள் கடந்த பின்னர் மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து சந்திக்க வேண்டும் என்று இந்த சந்திப்பை நடத்தினோம். எங்கள் சந்திப்பைக் குறை மாதமான பிப்ரவரியில் வைத்து மனநிறைவான மாதமாக மாற்றியிருக்கிறோம். நாங்கள் ஆசிரியர்களாக உருவாக்கப்படவில்லை. ஆசிரியராகப் படைக்கப்பட்டோம்'' என்று மு.மகேந்திரபாபு தெரிவித்தார்.
ஆசிரியை ஜோதிலட்சுமி கூறும்போது, ''நாங்கள் படித்த காலத்தில் அப்போது மருத்துவம், பொறியியல் படிப்புகளைக்கூட துறந்து இங்கு வந்து சேர்ந்த மாணவர்கள் உண்டு. இந்த கல்வி நிறுவன வளாகத்துக்குள் உடமைகளோடும், கனவுகளோடும் வந்தோம். இன்று கனவுகளை நிறைவேற்றி, சமுதாயத்தில் மிகப்பெரிய பொறுப்பான ஆசிரியர் பதவியில் இருக்கிறோம். 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த சந்திப்பு, வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷமாக அமைந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ஞா.அமல்ராஜ், சாந்தி ராஜகனி, சு.செல்வம், பெ.குணசேகரன் செய்திருந்தனர்.