

ஓசூரில் மாவட்ட அரிமா சங்கங்கள் சார்பில் நடப்புக் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பில் நீட் தேர்வுக்கான புத்தகங்களை இலவசமாக வழங்கும் விழா நடைபெற்றது.
ஓசூர் ரயில் நிலையச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அரிமா சங்க மூத்த நிர்வாகி ஒய்.வி.எஸ்.ரெட்டி தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரிமா சங்க முதலாம் துணை மாவட்ட ஆளுநர் ரவிவர்மா வரவேற்றுப் பேசினார். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பா, தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிசந்திரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்வில் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நீட் தேர்வுக்கான புத்தகங்கள் முதல் கட்டமாக ஓசூர் நகரில் உள்ள ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, சூளகிரி, தளி, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்புப் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டாம் கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இவ்விழாவில் நீட் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி வட்டம் ரமேஷ், ஓசூர் வட்டம் ஞானசுந்தரி, தேன்கனிக்கோட்டை வட்டம் சுப்பிரமணி மற்றும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.