Published : 18 Feb 2021 06:04 PM
Last Updated : 18 Feb 2021 06:04 PM
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆவணத்தான்கோட்டை மேற்கில் 1936-ல் தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளி பின்னர், 1986-ல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
166 மணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி மாணவர்களுக்குத் தனி வாகனம், மாணவர்களுக்குக் காலை உணவு திட்டம், நேர்மை அங்காடி, நவீன கழிப்பறை, இறகுப் பந்து மைதானம், சிறுவர் பூங்கா, ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய வசதிகளுடன் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளியாகவும் உள்ளது.
மேலும், தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் கராத்தே, யோகா, சிலம்பம், கணினி, ரோபோ, எழுத்துப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. எங்கு போட்டி நடந்தாலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கின்றனர்.
ஆசிரியர்களின் திறமைகளைப் பாராட்டி இப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கும் 'புதுமை ஆசிரியர்கள்' எனும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அண்மையில் வழங்கினார்.
இதன் அடிப்படையில் தங்கள் பள்ளியை ஆய்வு செய்து ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்குமாறு டெல்லியிலுள்ள ஒரு தரச்சான்று நிறுவனத்திடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி விண்ணப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, பள்ளியைப் பல கட்டங்களாக அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். பின்னர், அந்நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச் சான்று பிப்.15-ம் தேதி வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சர்வதேச தரச் சான்று பெற்ற முதல் அரசு நடுநிலைப் பள்ளியாக ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி விளங்குகிறது.
சர்வதேச தரச்சான்று பெறும் அளவுக்கு பள்ளியை உயர்த்திய ஆசிரியர்களைக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் சேர்ந்தது, பொதுத்தேர்வு முடிவில் தொடர்ந்து சிறப்பிடம், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் திறமையும் கொண்டுள்ளதோடு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றும் கிடைத்திருப்பது கல்விக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறுகையில், "தமிழக அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தியதால் கல்வித் தரமும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே தரச்சான்றும் கிடைத்துள்ளது. சிறந்த முறையில் செயல்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT