Last Updated : 15 Feb, 2021 06:46 PM

 

Published : 15 Feb 2021 06:46 PM
Last Updated : 15 Feb 2021 06:46 PM

பொறியியல் பல்கலை.யில் காலிப் பணியிடங்களை நிரப்புக: புதுவையில் பேராசிரியர்கள் போராட்டம் தொடங்கியது

படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தியும் காலிப் பணியிடங்களில் பேராசிரியர்களை நியமிக்கக் கோரி இன்று முதல் கறுப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளனர்.

புதுவை அரசு பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மத்தியக் கல்வித் துறையால் தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் மற்றும் எம்பிஏ பாடப்பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 480-ல் இருந்து 780 ஆகவும் , முதுநிலைப் படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 150-ல் இருந்து 300 ஆகவும் உயர்ந்துள்ளது .

மொத்தம் 3,500 மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் வெறும் 135 நிரந்தரப் பேராசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. ஓய்வுபெறும் பேராசிரியர்களின் காலியிடங்கள் கடந்த 14 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே உள்ளன. இந்நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி இன்று முதல் கறுப்புப் பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "சனிக்கிழமை வரை வகுப்புகள் பாதிக்காதவண்ணம் கறுப்புப் பட்டை அணிந்து விதிப்படி பணி என்ற போராட்டம் நடத்துவோம். அரசிடம் இருந்து சாதகமான பதில் வராதபட்சத்தில் பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x