Published : 13 Feb 2021 10:16 AM
Last Updated : 13 Feb 2021 10:16 AM
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டும் 14 ஆண்டுகளாகப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வளாகத்தில் 3,500 பேர் படித்து வரும் நிலையில் 135 நிரந்தரப் பேராசிரியர்களே உள்ளதால் பிப்.15 முதல் கறுப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் பேராசிரியர்கள் ஈடுபட உள்ளனர். வரும் 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு எடுத்துள்ளனர்.
புதுவை அரசு பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மத்தியக் கல்வித் துறையால் தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் மற்றும் எம்பிஏ பாடப்பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 480-ல் இருந்து 780 ஆகவும் , முதுநிலைப் படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 150-ல் இருந்து 300 ஆகவும் உயர்ந்துள்ளது .
இதுபற்றிப் பேராசிரியர்கள் கூறும்போது, ''மாநில அரசின் மோசமான நிதி நிலைமையைச் சுட்டிக்காட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் பணி உயர்வு தராமல் அரசின் துறைச் செயலர் மற்றும் உயர்கல்வி இயக்குனரால் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 3,500 மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் வெறும் 135 நிரந்தரப் பேராசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. ஓய்வுபெறும் பேராசிரியர்களின் காலியிடங்கள் கடந்த 14 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில் பணி உயர்வும் தரப்படாததால் மிகுந்த மனவேதனையில் பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .
சென்ற ஆண்டு வளாக வேலைவாய்ப்பு மூலமாக 365 மாணவர்களுக்குத் தலைசிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது . மாணவர்களுக்கு அதிகபட்ச வருமானமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சமும், சராசரி ஆண்டு வருமானமாக ரூ.4.9 லட்சமும் இம்முகாம் மூலம் கிடைக்கும் வகையில் கல்வித் தரம் உள்ளது . ஆனால், ஆசிரியர் நியமனம் குறித்து புதுச்சேரி அரசு நடவடிக்கையே எடுக்கவில்லை.
இத்தகைய சூழலில். சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் முன் பணி உயர்வு நேர்காணல் நடத்த வேண்டி கல்வி அமைச்சர், துறைச் செயலர் மற்றும் உயர் கல்வித்துறை இயக்குனரிடம் கோரிக்கை மனுவைக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அளித்தோம். ஆனால், இதுவரை பணி உயர்வு தராமல் இழுக்கடிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பேராசிரியர்கள் சங்கத் தலைவர் அமுதன், செயலாளர் இளஞ்செழியன், துணைத் தலைவர் பாலன், இணைச் செயலாளர் தினகரன் மற்றும் பொருளாளர் ஹேமகுமார் ஆகியோர் தலைமையில் திங்கட்கிழமை (பிப்.15) முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் பாதிக்காத வண்ணம் கறுப்புப் பட்டை அணிந்து, விதிப்படி பணி என்ற போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து சாதகமான பதில் வராத பட்சத்தில் பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT