Published : 11 Feb 2021 02:57 PM
Last Updated : 11 Feb 2021 02:57 PM

கரோனாவால் குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்த 92% மாணவர்கள்: ஆய்வில் தகவல்

கரோனா பெருந்தொற்றால் மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கத்தால் 92% மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்துள்ளதாகத் தனியார் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 44 மாவட்டங்களில் உள்ள 1,137 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 16,067 மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

’’அனைத்து வகுப்புகளிலும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, சராசரியாக 92 சதவீத மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்துள்ளனர். இங்கு மொழித் திறன் என்பது, ஒரு குறிப்பிட்ட படம் குறித்தோ அதன் பண்புகள் குறித்தோ விளக்குவது, அதுதொடர்பான வார்த்தைகளை வாசிப்பது, புரிதலுடன் வாசித்தல், ஒரு படத்தை அடிப்படையாகக் கொண்டு எளிய வாக்கியங்களை அமைப்பது உள்ளிட்டவற்றைக் குறிக்கிறது.

அதேபோல சராசரியாக 82 சதவீத மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட கணிதத் திறனை இழந்துள்ளனர். அதாவது ஒற்றை மற்றும் இரண்டு இலக்க எண்களை அடையாளம் காணுதல், எண் கணிதச் செயல்பாடுகளைச் செய்தல், சிக்கல்களைத் தீர்க்க அடிப்படை எண் கணிதச் செயல்பாடுகளைப் பயன்படுத்துதல், இரண்டு அல்லது முப்பரிமாண வடிவங்களை விவரித்தல், தரவிலிருந்து அனுமானங்களைப் படித்தல் மற்றும் வரைதல் ஆகிய திறன்களை மாணவர்கள் இழந்துவிட்டனர்.

இந்த கற்றல் இழப்பு அனைத்து மட்டங்களிலும் நிகழ்ந்திருக்கிறது. இதைப் போக்கும் வகையில் பாடங்களுக்கு இடையேயான இடைவெளியைப் போக்கும் வகையில் சிறப்பு வகுப்புகள், கூடுதல் நேரம், சமூகம் சார்ந்த கற்றல் செயல்பாடுகள் மற்றும் பொருத்தமான பாடத்திட்டப் பொருட்கள் ஆகியவை மூலம் மீட்டெடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x