Published : 10 Feb 2021 01:00 PM
Last Updated : 10 Feb 2021 01:00 PM
விசாரணை என்ற பெயரில் நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு வரம்பு மீறலில் ஈடுபடுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ஐ.அருள் அறம், செயலாளர் எஸ்.சந்திரமோகன் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு, துணைவேந்தர் வீட்டில் பணிபுரிந்த முன்னாள் பணிப் பெண்ணைக் கூட விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்பதைக் கனத்த இதயத்தோடு ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
துணைவேந்தரின் குடும்பத்தினரோடு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டீர்களா? என உயர் கல்வித்துறை துணைச் செயலாளர் அப்பணிப்பெண்ணிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். இது நாகரிக வரம்பினை மீறும் செயலாகும். பாஸ்போர்ட் எதுவும் தன்னிடம் இல்லை என்று அப்பெண் பதிலளித்துவிட்ட போதிலும், இது சம்பந்தமாக உயர் கல்வித்துறை பெண் அதிகாரியின் தொடர் கேள்விகள், விரும்பத்தக்கவை அல்ல.
மூன்று மாத கால விசாரணையில் துணைவேந்தர் மீதான புகாரில் உண்மை எதுவும் இல்லாத காரணத்தால், விசாரணைப் பணிகளில் இருந்து விலகி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் கலையரசன் விசாரணைக் குழுவுக்கு, மீண்டும் கால நீட்டிப்பு அளிக்க வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT