Last Updated : 08 Feb, 2021 07:19 PM

1  

Published : 08 Feb 2021 07:19 PM
Last Updated : 08 Feb 2021 07:19 PM

காலை உணவுடன் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இலவச மதிய உணவுத் திட்டம் தொடக்கம்

காலை உணவு தருவதைத் தொடர்ந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பல ஏழை மாணவிகள் உணவு சாப்பிடாமல் கல்லூரிக்கு வரும் சூழல் இருந்தது. இதையடுத்து முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக மாணவிகளுக்கு இலவசமாகக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பல ஏழை மாணவிகளுக்கு மதிய உணவு தேவைப்படும் சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம் மற்றும் அருட்பிரகாச வள்ளலார் சமரச சன்மார்க்க சத்திய சாதனைச் சங்கம் சார்பில் `அமுதம்' என்ற இலவச மதிய உணவுத் திட்ட தொடக்க விழா இன்று நடந்தது.

இதற்குக் கல்லூரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவரும், பேராசிரியையுமான ரஜினி சானோலியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கல்வித்துறை செயலர் அசோக்குமார் கலந்துகொண்டு இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

முதல் நாளான இன்று மாணவிகளுக்குச் சாம்பார் சாதத்துடன் உருளைக்கிழங்கு பொறியல், நார்த்தங்காய் ஊறுகாய், கமலா ஆரஞ்சுப் பழம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வள்ளலார் சங்கத் தலைவர் கணேசன், முன்னாள் மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

இத்திட்டம் தொடர்பாகக் கல்லூரி முதல்வர் சுப்ரமணி கூறுகையில், "கல்லூரியில் பயிலும் பல ஏழை மாணவிகளுக்கு மதிய உணவு தர முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 500 ஏழை மாணவிகள் பயன்பெறுவர். தற்போது கல்லூரி இரண்டு ஷிப்டுகளாக இயங்குகிறது. இந்த இலவச மதிய உணவுத்திட்டம் ஏழை மாணவிகள் பலரையும் பசியாற்றும்" என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி வள்ளலார் சங்கத்தினர் கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் வருவோருக்கு உணவு தருகிறோம். தற்போது அரசுக் கல்லூரி மாணவிகளுக்கும் முன்னாள் மாணவிகளுடன் இணைந்து மதிய உணவைத் தர உள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x