Published : 29 Jan 2021 01:08 PM
Last Updated : 29 Jan 2021 01:08 PM
10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுக் கட்டணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வழியில் பயில்வோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு:
''2020-2021ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்காகத் தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டிய பள்ளி மாணாக்கரிடமிருந்து மட்டும் தேர்வுக் கட்டணத் தொகையினைப் பெற்று, இத்துடன் இணைத்து அனுப்பப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி அரசு இணையதளத்திலுள்ள Payment option-ஐப் பயன்படுத்தி ஆன்லைன் (Credit Card / Debit Card / Net Banking)) வாயிலாக 11.02.2021-க்குள் தேர்வுக் கட்டணத்தினைச் செலுத்த வேண்டும்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விற்கான கட்டணம்
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம் - ரூ.100/-
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் - ரூ.10/-
சேவைக் கட்டணம் - ரூ.5/-
மொத்தம் (ஒரு மாணவருக்கு) - ரூ.115/-
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான கட்டணம்
செய்முறை கொண்ட பாடங்களடங்கிய பாடத் தொகுப்பில் பயில்வோர் -ரூ.200/-
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் - ரூ.20/-
சேவைக் கட்டணம் - ரூ.5/-
மொத்தம் (ஒரு மாணவருக்கு) - ரூ.225/-
செய்முறை இல்லாத பாடங்களடங்கிய பாடத் தொகுப்பில் பயில்வோர்- ரூ.150/-
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் - ரூ.20/-
சேவைக் கட்டணம் - ரூ.5/-
மொத்தம் (ஒரு மாணவருக்கு) - ரூ.175/-
தேர்வுக் கட்டண விலக்கிற்குத் தகுதியானோர்:
1. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
2.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில் பயிலும் பின்வரும் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
SC/SCA/ST மற்றும் SC Converts (SS) ஆகியோருக்கும் MBC/DC ஆகியோருக்கும் பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை. BC/ BCM- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டும் கட்டணம் கிடையாது.
3. அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் கண் பார்வையற்றோர் மற்றும் கேட்கும் / பேசும் திறனற்றோர்.
4.மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடையவர்கள் அல்லர்.
தேர்வுக் கட்டணம் செலுத்துதல் தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த காணொலியினை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் காணலாம்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT