Published : 26 Jan 2021 06:31 PM
Last Updated : 26 Jan 2021 06:31 PM
காரைக்காலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும், பொம்மலாட்டக் கலைஞருமான கே.கேசவசாமிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பத்மஸ்ரீ விருது நாட்டில் 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான கே.கேசவசாமியும் (78) ஒருவர்.
காரைக்காலைச் சேர்ந்த இவர், 36 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பள்ளியில் மாணவர்களிடம் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பொம்மலாட்டக் கலை மூலம் பாடங்களை நடத்தி நாட்டத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து பொம்மலாட்டக் கலையில் பல புதுமைகளைப் புகுத்தி, ஏரளமான நிகழ்ச்சிகளை நடத்தி, மக்கள் மத்தியில் இக்கலையைப் பரவலாகக் கொண்டு சென்றுள்ளார். இக்கலையை அழியாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க இலவசமாகப் பயிற்சியும் அளித்து வருகிறார். ஆதரவற்ற முதியோருக்காக, காரைக்கால் புறவழிச் சாலையில் ஸப்தஸ்வரம் என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.
விருது அறிவிக்கப்பட்டது குறித்து கே.கேசவசாமி கூறியது:
”எனக்கு மிக உயரிய பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இக்கலைக்காக நான் பெறப்போகும் 3-வது தேசிய விருது இது. ஆசிரியர் பணியில் இருக்கும்போது மாணவர்களுக்கு பொம்மலாட்டக் கலையின் உதவியுடன் பாடம் நடத்தியுள்ளேன். கையுறை பொம்மலாட்டம், தோல் அல்லது நிழல் பொம்மலாட்டம், கயிற்று பொம்மலாட்டம் என்ற 3 வகைகள் உண்டு. நான் கயிற்று பொம்மலாட்டக் கலையை நிகழ்த்தி வருகிறேன்
கனமில்லாமல் மிகவும் இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக மரக்கட்டையில் பொம்மைகள் இருந்த நிலையை மாற்றி மரக்குச்சி, காகிதக் கூழ் மூலம் நானே பொம்மைகளைத் தயாரிக்கத் தொடங்கினேன். இக்கலையில் பல புதிய முறைகளையும் புகுத்தினேன். ஆரம்பத்தில் கை, கால்கள் மட்டும் அசையும் வகையிலேயே பொம்மைகள் இருந்தன. ஆனால், நான் உடல் பாகங்கள் அனைத்தும் அசையும் வகையில் பொம்மைகளைத் தயாரித்தேன்.
மேடையில் உயிருள்ள ஒருவர் நடித்தால் எப்படி இருக்குமோ, அத்தகைய உணர்வில் இந்த பொம்மைகளின் நடிப்பு அமைந்திருக்கும் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. உலகில் வேறு எங்கும் இதுபோன்ற அசைவுகளை உடைய பொம்மலாட்டம் கிடையாது. சில வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இக்கலையைப் பயின்று, இதுபோன்ற பொம்மைகளைத் தயாரிக்கும் முறையைக் கற்றுச் சென்று அந்நாடுகளில் இக்கலையை நிகழ்த்தியும் வருகின்றனர்.
இக்கலை மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நடத்தியுள்ளேன். பொம்மைகளைச் செய்யவும், இயக்கவும் 2 நாட்களில் கற்றுக்கொள்ள முடியும். தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றுடன் 5 நாட்கள் தங்கியிருந்து எவ்விதக் கட்டணமும் இல்லாமல் என்னிடம் பயிற்சி பெற்றுச் செல்லலாம்."
இவ்வாறு கேசவசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT