Published : 21 Jan 2021 06:59 PM
Last Updated : 21 Jan 2021 06:59 PM
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து, போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியைத் தமிழக அரசு ஏற்ற பிறகும் மாணவர்களிடம் அரசுக் கல்லூரிக்குரிய கட்டணத்தை வசூலிக்காமல், அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்றுடன் (ஜன.20) 43-வது நாளாகக் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பல்வேறு விதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மறு தேதி குறிப்பிடாமல், காலவரையின்றி மூடப்படுவதாகவும், விடுதிகளையும் மூடுவதால், அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவிகள் இன்று (ஜன.21) மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்லூரிக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரியைச் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்துப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசுவதாகவும், அரசுக்குத் தெரியப்படுத்துவதாகவும் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ''மருத்துவக் கல்லூரியை மூடி, விடுதியில் இருந்து எங்களை வெளியேற்றினாலும் எங்களது போராட்டம் தொடரும்'' என்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணியாளவில் முல்லை இல்லம் பெண்கள் விடுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விடுதிவாயில் பகுதியில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த எம்ஆர்கே. கல்விக் குழுமத்தின் தலைவர் எம்ஆர்கேபி. கதிரவன், மருத்துவக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ''திமுக உங்களோடு துணை நிற்கும். கல்லூரியையும் விடுதியையும் மூடுவது தவறான செயல்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT