Published : 21 Jan 2021 06:07 PM
Last Updated : 21 Jan 2021 06:07 PM
சேலம் மாவட்டத்தில் பள்ளி திறந்து இரண்டு தினங்களில் பத்தாம் வகுப்பு மாணவிக்குக் கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மாணவிகள், ஆசிரியர்கள், விடுதி வார்டன் உள்பட 76 பேரைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வகுப்புக்கு 25 மாணவ, மாணவியரும், முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிக்கூடங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தும்பல் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, ஆத்தூர் அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். அவருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னதாக பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள பள்ளி விடுதிக்கு வந்து தங்கி, வகுப்புக்குச் சென்று வந்தார். நேற்று மாணவியின் பரிசோதனை முடிவு வெளிவந்த நிலையில், அவருக்குத் தொற்று பரவியிருப்பது உறுதியானது.
உடனடியாக மருத்துவத்துறை அதிகாரிகள் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கரோனா வார்டில் மாணவியை அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரிசோதனை முடிவு தெரியாமல் பள்ளிக்கு மாணவி வந்ததால், சக மாணவியர், ஆசிரியர்கள், விடுதி வார்டன்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், இவருடன் தொடர்பில் இருந்த 76 பேரைச் சுகாதார துறை அதிகாரிகள் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாகடர் செல்வகுமார் கூறும்போது, ''பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்ளாத நிலையில் பள்ளிக்கு மாணவி வந்துள்ளார். கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்ததாகச் சக வகுப்பு மாணவிகள் 25 பேர், விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவிகள் 36 பேர், ஆசிரியர்கள், வார்டன்கள் உள்பட 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும் பள்ளி மூடப்பட்டு, கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ளாட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT