Last Updated : 19 Jan, 2021 04:38 PM

 

Published : 19 Jan 2021 04:38 PM
Last Updated : 19 Jan 2021 04:38 PM

தூத்துக்குடியில் 316 பள்ளிகள் திறப்பு: 10 மாதங்களுக்குப் பிறகு வந்ததால் மாணவ, மாணவியர் உற்சாகம்- மழை பாதிப்பால் 12 பள்ளிகள் திறக்கப்படவில்லை

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவியருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 316 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. தூத்துக்குடியில் மழைவெள்ளம் தேங்கி நிற்பது உள்ளிட்ட காரணங்களால் 12 பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் உற்சாகமாக காணப்பட்டனர்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து நடப்புக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றன.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் 87 அரசு பள்ளிகள், 126 அரசு உதவி பெறும் பள்ளிகள், 97 மெட்ரிக் பள்ளிகள், 18 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 328 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

இதில் இன்று 316 பள்ளிகள் திறக்கப்பட்டன. 12 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதில் பள்ளி வளாகத்தில் மழைநீர் அதிகமாக தேங்கி நிற்பதன் காரணமாக 7 பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும், 5 பள்ளிகள் இன்று செவ்வாய்க்கிழமை என்ற காரணத்தால் நாளைக்கு (ஜன.20) திறக்க அனுமதி கோரியுள்ளன.

மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் மொத்தம் 25,110 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில் இன்று 17,746 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்திருந்தனர். இது 70.70 சதவீதமாகும். இதேபோல் 12-ம் வகுப்பில் மொத்தம் 20,700 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில் 15,048 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்திருந்தனர். இது 72.70 சதவீதமாகும். மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொத்தமுள்ள 45,810 மாணவ, மாணவியரில் 32,794 பேர் இன்று பள்ளிக்கு வந்திருந்தனர். இது 71.6 சதவீதமாகும்.

அனைத்துப் பள்ளிகளும் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை அனைத்து பள்ளிகளின் நுழைவு வாயில்களிலும் மாணவ, மாணவியருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். வகுப்பறைகளில் அதிகபட்சமாக 25 மாணவ, மாணவியர் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பள்ளிகளில் முதல் நாளில் பாடங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. மாணவ, மாணவியருக்கு கரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பொதுத்தேர்வு குறித்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகமாக காணப்பட்டனர். காலை முதலே ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான மாணவ, மாணவியரை பெற்றோரே அழைத்து வந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x