Last Updated : 19 Jan, 2021 01:32 PM

 

Published : 19 Jan 2021 01:32 PM
Last Updated : 19 Jan 2021 01:32 PM

பள்ளிகள் திறப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80% மாணவர்கள் ஆர்வமுடன் வருகை

வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் ஆசிரியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80% மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த நிலையில், நண்பர்களைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கத்துக்குப் பின், அரசு சில தளர்வுகள் அறிவித்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் தொடங்கின.

பல்வேறு நிபந்தனைகளுடன் வகுப்புகள் தொடங்கிய நிலையில், பள்ளிக்கு வந்த மாணவர்களில் பெரும்பாலானோரைப் பெற்றோர்களே அழைத்து வந்தனர். அவ்வாறு வந்தவர்களுக்குப் பள்ளியின் வாயிலிலேயே ஆசிரியர்கள் மூலம் கிருமிநாசினி அளிக்கப்பட்டது.

கைகளைக் கழுவியபின், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்த நிலையில், மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்புக்குள் 6 அடி இடைவெளியில் 25 மாணவர்களே அமர வைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு உயர்நிலை, மேல்நிலை, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 242 பள்ளிகளில் 43,145 மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பயில்கின்றனர். இவர்களில் 80 சதவிகிதம் பேர் பள்ளிக்கு வந்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 3 நாட்களுக்குப் பாடம் எதுவும் நடத்தப்படாமல் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களிடம் பேசியபோது, ''எதிர்பாராமல் எங்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை அமைந்துவிட்டது. இருப்பினும் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது மனதுக்கு இறுக்கமாக இருந்தது. தற்போது பழையபடி பள்ளிக்கு வந்து நண்பர்களைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் அதிக வேலைகள் இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளோம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x