Published : 17 Jan 2021 02:22 PM
Last Updated : 17 Jan 2021 02:22 PM
10, 12-ம் வகுப்புகளுக்கு 40 சதவீத அளவுக்குப் பாடத் திட்டம் குறைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த 10 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதற்கான பணிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது.
இந்நிலையில் தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கும் 40 சதவீதப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத வேலை நாட்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாட்களில் பாடங்களை நடத்தப் போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்கள் நாளை மறுநாள் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT