Published : 17 Jan 2021 01:26 PM
Last Updated : 17 Jan 2021 01:26 PM
கற்றல் அனுபவங்களுக்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறைகளுக்குச் சென்று பார்வையிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:
''பல்கலைக்கழகங்கள் சமூகப் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள் வசிக்கும் இல்லங்களுக்கும் சிறைகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும். அதன்மூலம் கைதிகள் என்ன மாதிரியான சூழ்நிலையில் குற்றங்களைச் செய்துவிட்டுச் சிறைகளுக்குச் சென்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
மாணவர்கள் இத்தகைய அனுபவங்களைப் பெறுவதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் குற்றங்கள் இழைப்பதைத் தவிர்ப்பர். வருங்காலச் சமூகம் ஆரோக்கியமான மற்றும் வலிமையான மனநிலையைக் கொண்டதாக மாறும்.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். நம்முடைய மகள்களுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் நாம்தான் அதிகாரமளிக்க வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து அவர்களைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT