Published : 16 Jan 2021 06:10 PM
Last Updated : 16 Jan 2021 06:10 PM
பள்ளிகளைத் திறக்கும் முன் கரோனா தடுப்பூசியை வழங்குங்கள் என்று கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10ஆம் தேதி முடிவடைகின்றன. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. எனினும் விரிவான தேர்வுக் கால அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. எனினும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜனவரி 18-ம் தேதி வெபினாரில் கலந்துரையாட உள்ளார். இந்த நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் கே.வி. மாணவர்கள் பள்ளிகளைத் திறக்கும் முன் கரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் சில மாணவர்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர், பொதுத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT