Published : 16 Jan 2021 05:08 PM
Last Updated : 16 Jan 2021 05:08 PM

கரோனா தடுப்பூசி: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாட்டு மக்களுக்குக் கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து 2 கட்டங்களாகக் கரோனா தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி திட்டத்துக்குப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உதவ வேண்டும் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில், ''சீரான மற்றும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்துக்குப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் உரிய ஆதரவை அளிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தங்களுடைய தொடர்புகள் மற்றும் பிற தளங்கள் மூலமாக தடுப்பூசி திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், குடும்ப அளவில் தடுப்பூசி திட்டம் பரவலாக்கப்பட வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த மத்தியக் கல்வி அமைச்சகம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இதற்குப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x