Published : 11 Jan 2021 02:31 PM
Last Updated : 11 Jan 2021 02:31 PM

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா: தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வரவேற்பு

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் அறிவிப்புக்கு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் ரா. தாமோதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக ஊரடங்கு மற்றும் சமூக விலகல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கல்லூரிகள் முழுமையாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி ஆன்லைன் மூலமாகக் கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள். குறிப்பாக இப்பெருந்தொற்றுக் காலத்தில் அன்றாட வருவாயைக்கூடப் பல குடும்பங்கள் இழந்துவிட்டன. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இணையதள வசதியின்றி, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான அளவு இணைய வசதிக்கான டேட்டாவை இலவசமாக வழங்க வேண்டும் என்று, மத்தியக் கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தமிழக முதல்வருக்கு, தமிழகக் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு, கடந்த ஆக. 21-ம் தேதி கோரிக்கை மனு அளித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு, தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று அறிவித்தார்.

தமிழக மாணவர்களின் நலனுக்காக இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழக அரசானது, தமிழகக் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அளித்த கடிதத்தை ஏற்று, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி அளவில் இலவச டேட்டா, எல்காட் மூலமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்குத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவிக்கிறது. முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர், செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன்மூலம் தமிழகக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்கு தடையின்றி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து தங்கள் கற்றல் பணிகளை மேற்கொள்ள முடியும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x