Published : 07 Jan 2021 01:42 PM
Last Updated : 07 Jan 2021 01:42 PM
3-வது முறை தேர்வு எழுத அனுமதிப்பதுடன் 75% மதிப்பெண் என்ற தகுதியை நீக்க வேண்டும் என்று ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்காக மத்தியக் கல்வி அமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் ஜேஇஇ தேர்வு முறையில் மத்தியக் கல்வி அமைச்சகம் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் இத்தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப 4 முறை வேண்டுமானாலும் தேர்வை எழுதலாம். அதில் அவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். அதேபோல, 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி உள்ளிட்ட அறிவிப்புகளை, மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை அறிவிக்கிறார்.
இத்தேர்வை எழுத 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2019-ம் ஆண்டு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு 2021 தேர்வெழுத அனுமதி கிடையாது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு குறித்து மத்திய அமைச்சருக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை 3-வது முறையாக எழுத அனுமதிக்க வேண்டும். 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி என்ற தகுதியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் மாணவர் ஒருவர் கூறும்போது, ''கரோனா தொற்று ஏற்பட்டதால் என்னால் கடந்த முறை ஜேஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகளைச் சரியாக எழுத முடியவில்லை 2019ஆம் ஆண்டுத் தேர்வர்களுக்கு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வெழுத இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்வு பற்றி இன்னொரு மாணவர் கூறும்போது, ''ஜேஇஇ தேர்வை எழுத அனைத்து மாணவர்களும் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தயவுசெய்து நீக்குங்கள். கோவிட் காரணமாக எங்களின் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எங்களின் சராசரி மதிப்பெண்கள் 75 சதவீதத்தை விடக் குறைந்ததால், கடுமையாகப் படித்தும் எங்களால் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவர், ''கோவிட் தொற்று மற்றும் டெல்லி கலவரத்தால் எங்களின் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே ஐஐடி, என்ஐடிகளுக்கு 75 சதவீத மதிப்பெண் தேர்ச்சி என்ற தகுதியை நீக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT